வானதி சீனிவாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த டெல்லி முதல்வர்..!
சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தே.ஜ கூட்டணி சார்பில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று (ஏப்.15) கோவை வருகை தந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது பேசிய பாஜக நிர்வாகிகள், “திருப்பதிக்கு சென்று உங்களுக்காக அர்ச்சனை செய்துவிட்டு, ரேகா குப்தா நேராக இங்கு வந்துள்ளார். நீங்கள் (வானதி சீனிவாசன்) விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனை. அவரிடம் கவலைப்படாதீர்கள், உங்கள் சார்பில் நான் கோவை வடக்குத் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். இந்த தேர்தலில் உங்கள் வெற்றி நிச்சயம்" என உருக்கமாகத் தெரிவித்து அவருக்கு ஆறுதல் கூறியதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, தடாகம் சாலையில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு தற்போது வளர்ச்சியில் தொடர்ந்து பின்தங்கி வருகிறது. ஆனால், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஒட்டுமொத்த தேசத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறது. தமிழக மக்களும் இந்த வளர்ச்சியை விரும்புகிறார்கள். மேலும், மாநிலம் முழுவதும் மிகப்பெரிய மாற்றம் தேவை என்பதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர். ஆகையால் தே.ஜ கூட்டணி வெல்வது உறுதி.
மேலும், தமிழகத்தில் என்.டி.ஏ ஆட்சி அமைவதற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். குறிப்பாக, கோவை தொகுதியில் வானதி சீனிவாசன் ஒரு சிறந்த வேட்பாளர். அவர் மீது மக்கள் மிகுந்த அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ளனர். அவர் நிச்சயமாக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, மகளிர் 33% இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு, “2029 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதே முக்கியமான விஷயம். இதற்கான உறுதிமொழியை ஒட்டுமொத்த நாட்டுப் பெண்களுக்கும் நாங்கள் அளித்திருக்கிறோம்” என்றார்.