டெல்லி 265... கும்மிடிப்பூண்டி 342! இந்தியாவின் நம்பர் 1 மாசுபட்ட நகரமாக மாறிய கும்மிடிப்பூண்டி.!
இந்தியாவிலேயே காற்று மாசுபாட்டிற்கு பெயர் போன டெல்லியில், நேற்று காற்றின் தர குறியீடு 265 ஆக மட்டுமே பதிவாகியிருந்தது. ஆனால், சென்னையின் முக்கிய தொழில்துறை நகரமான கும்மிடிப்பூண்டியில் நேற்று காற்றின் தர குறியீடு 342 ஆக பதிவாகி, நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த மூன்று நாட்களாக கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரம் தொடர்ந்து சரிந்து வருகிறது:
• நவம்பர் 19: 305
• நவம்பர் 20: 321
• நவம்பர் 21 (நேற்று): 342
301 முதல் 400 வரையிலான காற்றின் தரக் குறியீடு 'மிகவும் மோசமானது' என வகைப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "காற்றின் திசை மற்றும் வளிமண்டல மாற்றங்களால், மற்ற நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் இருந்து வரும் மாசடைந்த காற்று கும்மிடிப்பூண்டியில் வந்து சேர்கிறது. மேலும், காற்றின் வேகம் குறைவாக இருப்பதால், மாசுத் துகள்கள் கலைந்து செல்லாமல் வளிமண்டலத்திலேயே தங்கிவிடுகின்றன" என தெரிவித்துள்ளார்.
இந்த காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பதால், கடுமையான சுவாச கோளாறுகள் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.