நெப்போலியன் மகன் குறித்த அவதூறு வீடியோக்கள் அகற்றம்
நடிகர் நெப்போலியன் மகன் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட அவதூறு வீடியோக்கள் அகற்றப்பட்டன.
முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல நடிகருமான நெப்போலியன் மகன் தனுசுக்கும், நெல்லை மாவட்டம் மூலக்கரை பட்டியைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக திருமண நடந்தது. திருமண நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் ஏராளமான பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் தனுஷின் உடல்நிலை குறித்தும், அவரது குடும்ப வாழ்க்கை குறித்தும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் குறிப்பாக யூடியூப் சேனல்களில் சிலர் அவதூறு பரப்பி வந்துள்ளனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட நெப்போலியனின் குடும்பத்தினர் தனது மயோபதி மருத்துவமனை நிர்வாகம் மூலம் இன்று காலை நெல்லை எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்போது நெப்போலியனின் அண்ணன் கிருபாகரனும் உடன் வந்திருந்தார்.
புகார் எதிரொலியாக நடிகர் நெப்போலியன் மகன் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட அவதூறு வீடியோக்கள் அகற்றப்பட்டன. நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். உண்மைக்கு புறம்பான தகவல்கள் உள்ள யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோக்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் பல்வேறு யூடியூப் சேனல்களில் இருந்தும் அவதூறு வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும், யூடியூப் சேனல்களின் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை பெறும் பணியில் தீவிரம் காட்டிவருவதாகவும் சைபர் கிரைம் போலீசார் கூறுகின்றனர்.