☰
×

“என்ன ஒரு ஆச்சரியம்”- அம்மாவுக்கு ஒரு மோதிரம், குழந்தைக்கு ஒரு மோதிரம்... யார் இந்த தீப்ஷிகா?

 

மதுரையைச் சேர்ந்த தீப்ஷிகாவின் மகளும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் மோதிரம் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையில் தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் த.வெ.க. சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று மதுரையில் முறைப்படி தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டத்தின் பிற அரசு மருத்துவமனைகளில் பிறந்த 25 குழந்தைகளுக்குத் தன் கரங்களால் மோதிரங்களை வழங்குகிறார். தொடர்ந்து, பிரசவ வார்டிற்கு நேரில் சென்று அங்கிருக்கும் 10 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்து, கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களின் நலனை விசாாித்தார்.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்தவர் தீப்ஷிகா. இவரது மகளுக்கும் நடிகர் விஜய் தங்க மோதிரம் அணிவித்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், 2000-ஆம் ஆண்டில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் (GRH) நடைபெற்ற நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது, நடிகர் விஜயிடம் இருந்து குழந்தையாக இருந்த தீப்ஷிகா ஒரு தங்க மோதிரத்தைப் பெற்றார். 26 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே மருத்துவமனையில், அவரது மகளும் விஜய்யிடமிருந்து தங்க மோதிரத்தைப் பெற்றுள்ளார்.