×

தீனா ரீ ரிலீஸ் கொண்டாட்டம் - தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!!

 

நடிகர் அஜித்குமாரின் 53 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது . அஜித்குமாரின் பிறந்த நாளை ஒட்டி அவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன தீனா திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.  23 ஆண்டுகளுக்கு பின்னர் தீனா திரைப்படம் டிஜிட்டல் முறையில் ரீலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று படம் வெளியாகி உள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் சென்னையில் உள்ள தியேட்டரில் இன்று தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடல் ஒலித்த போது அங்கிருந்த ரசிகர்கள் திரையரங்குனுள்  பட்டாசு கொளுத்தி போட்டு கொண்டாடியுள்ளனர். இதனால் தியேட்டரில் பட்டாசு தீப்பொறி புகை மூட்டத்தை ஏற்படுத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.



 இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் 2001 இல் வெளிவந்த தீனா திரைப்படம் அஜித் குமாருக்கு பெரும் வரவேற்பு பெற்று தந்தது.  இந்த படத்தில் இருந்து தான் அஜித்குமார் தல என்று அழைக்கப்பட்டார் . இப்படத்தில் நடிகர்கள் லைலா,  சுரேஷ் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார் என்பது கவனிக்கத்தக்கது.