கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு
கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே இருந்து வந்தார். அவ்வப்போது, வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கைகளை வெளியிட்டுவந்தது. 70 நாட்களாக தொடர் சிகிச்சையில் வி.எஸ்.பாபு இருந்து வந்தாலும், கடந்த 2 வாரங்களாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. இதற்கிடையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகத் தொடங்கின. அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடக்கோரி சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவும் இருந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் வி.எஸ்.பாபு கடந்த 19 ஆம் தேதி காலமானார்.
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ.வாக இருந்த வி.எஸ்.பாபு காலமானதால் அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர், கொளத்தூர் ஆகிய 6 தொகுதிகள் காலியாக உள்ளன.