×

டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு! 23 ஆண்டுகளுக்கு பின் தவெக அரசு எடுத்த அதிரடி முடிவு

 

டாஸ்மாக் கடைகள் தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2003-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுதான் மக்கள் நலன், வருவாய் பாதுகாப்பு, கட்டுப்பாடு என அரசே நடத்த வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக நின்று, மது விற்பனையை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து டாஸ்மாக்கை உருவாக்கியது. அதனால்தான் இன்று டாஸ்மாக் மாநிலத்தின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக மாறி, 2024-25-ல் மட்டும் ₹48,344 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மதுபானங்களை உற்பத்தி செய்வது, மொத்தமாக கொள்முதல் செய்வது மற்றும் கடைகள் மூலம் சில்லறை விற்பனை செய்வது என அனைத்தையும் அரசு தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இதன் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைத்தது. இதன்மூலம் அரசு ஊழியர்களின் ஊதிய மற்றும் பல்வேறு திட்டங்களின் செலவினங்களுக்கு இந்த பணம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதிமுக அரசு மக்களின் நலனுக்காகவும் அரசு வருவாய்க்காகவும் மது விற்பனையை அரசுடமையாக்கியது.

இந்நிலையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தவெக தலைமையிலான அரசு “டாஸ்மாக் கடைகளை நடத்துவதில் கண்ணியம் இல்லை” என்று சொல்லி தனியாரிடம் ஒப்படைக்க உள்ளது.  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து தொடங்கும் இந்தத் தனியார்மயமாக்கல், 4,048 கடைகளையும் படிப்படியாகத் தனியார் கைகளுக்குக் கொடுக்கப்பட உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களைப் போன்று தமிழ்நாடும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதன் மூலம் அரசுக்கு ஏற்படும் கெட்ட பெயர்களை தவிர்ப்பது மட்டுமின்றி கடைகளின் எண்ணிக்கையும் குறைத்து மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அரசு கருதுகிறது. மேலும் மதுபான விற்பனையின் மூலம் வருவாய் ஈட்டுவதை தமிழக வெற்றிக்கழக அரசு விரும்பவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.