அமைச்சர் சரத்குமாரின் வீடியோவை வெளியிட்டதாக கொலை மிரட்டல்- நண்பர் பரபரப்பு பேட்டி
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோவை அவரது நண்பர் சரண் ஜெயராமன் வெளியிட்டதாக கூறி அமைச்சர் ஆதரவாளர்கள் கத்தியுடன் வீட்டிற்கு வருவதாக தாம்பரம் துணை ஆணையரிடம் பாதிகப்பட்டவர் மனு அளித்துள்ளார். தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் சரத்குமாரின் பள்ளி வகுப்பு நண்பரான சரண் ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இப்போது அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நான் தான் ரிலீஸ் பண்ணிருப்பேனு சொல்றாங்க. ஏனெனில் நானும் அமைச்சர் சரத்தும் ஒரே வகுப்புல படித்திருக்கிறோம். நான் திமுக ஆதரவாளர். அதனால் நான் தான் இந்த வீடியோவை வெளியிட்டிருப்பேனு சொல்றாங்க.. எல்லாத்துக்கும் காரணம் திமுக அரசு தான் காரணம் என சொல்லும் தவெக அரசு இதற்கும் திமுக அரசு தான் காரணம் என சொல்கிறது. அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தினாரா இல்லையா என கண்டுபிடிக்கிறதை விட்டுவிட்டு, யார் வீடியோவை ரிலீஸ் பண்ணானு கண்டுபிடிச்சிட்டு இருக்காங்க. அப்ப இது யாருக்கான அரசு. தவெக அரசு அவங்க அமைச்சரை காப்பாற்றுகிறதா? எங்க வீட்டுக்கு ஆள் அனுப்புறாங்க! இப்ப உங்க கிட்டதான பவர் இருக்கு. சரத் யார் கிட்ட போதைப்பொருள் வாங்குனார்?னு கண்டுபிடிங்க! குழந்தை, மனைவியுடன் வந்து விளக்கம் தந்தா நம்பிடுவாங்களா?” எனக் கேள்வி எழுப்பினார்