×

"அகவிலைப்படி உயர்வை உடனே வழங்குக" -  ஜி.கே.வாசன் கோரிக்கை!!

 

ஆசிரியர்களுக்கும். அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை  தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதே போல பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பணிக்காலத்தில் ஆற்றிய பணியும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி இருக்கும் போது அவர்களுக்கு அகவிலைப்படியானது காலத்தே வழங்கப்பட வேண்டும். அதாவது விலைவாசி, பொருளாதார நிலை ஆகியவற்றை கவனத்தில் கொண்டால் அகவிலைப்படியும் அவசியமான ஒன்று. மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவது போல தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அவ்வப்போதே வழங்க வேண்டும் என்பது நடைமுறையில் ஒன்று, குறிப்பாக மத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான உயர்த்திய 14 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு 01.07.2021 முதல் வழங்கியது. 

இதே போல தமிழக அரசும் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வழங்கவில்லை. அதற்கு பதிலாக தமிழக அரசு 01.07.2022 முதல் இந்த 14 சதவீத அகவிலைப்படியை வழங்கியது.மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான உயர்த்திய 3 சதவீத அகவிலைப்படியை 01.01.2022 முதல் மத்திய அரசு வழங்கியது. இதன் அடிப்படையில் தமிழக அரசும், மாநில அரசின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 01.01.2022 முதல் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வழங்கவில்லை. 01.07.2022 முதல் மேலும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்த மத்திய அரசு போல தமிழக அரசும் அறிவித்து வழங்கியிருக்க வேண்டும். இப்படி மத்திய அரசு உயர்த்தி, வழங்கும் அகவிலைப்படியானது எப்படி பயனுள்ள வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் காலத்தே சென்றடைகிறதோ அதே போல தமிழக அரசும் அவ்வப்போதே அகவிலைப்படி உயர்வை அறிவித்து அவ்வப்போதே வழங்க வேண்டும் என்பது நியாயமானது,  இதைத்தான் மாநில அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே தமிழக அரசு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உரிய அகவிலைப் படியை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.