×

மாற்றுத்திறனாளிகளுக்கான வேட்புமனு தாக்கல் - கால அவகாசம் நீட்டிப்பு!

 


உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகளை நியமிப்பதற்கான சட்டத்தை அண்மையில் அரசு கொண்டு வந்தது.   இதன்மூலம் தமிழகம் முழுவதும்  13,357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும்,  முதல்கட்டமாக  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2,984 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.  அதன்படி கடந்த ஜூலை 1ம் தேதி முதல்  தகுதியான மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றனர். 

மேலும் அரசு தரப்பில்,  பேரூராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி/மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி/மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் 17-ம் தேதி அன்று மாலை 03.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  

அத்துடன்  விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதனிடையே பேரூராட்சி , நகராட்சி, மாநகராட்சி மன்றங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய இருந்தது.   இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில்  நியமன உறுப்பினர் பதவிக்காக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.