×

வீட்டுத் தீயை அணைக்க போராடியபோது வெடித்த சிலிண்டர்: 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

 

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்ன அம்மன்குடியை அடுத்துள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன். விவசாயியான இவருக்கு ஒரு மனைவி மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 29 ஆம் தேதி அன்றிரவு முருகையன் தன் வீட்டின் முன் பகுதியில் உறங்கி உள்ளார். அப்போது அவர் வீட்டின் கீற்று கொட்டைகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் அனைவரும் சத்தமிட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், கட்டுக்கடங்காத தீ கொழுந்துவிட்டு எரிந்து மேலும் பரவியது. சமையல் வரை பரவிய தீ, அங்கிருந்த சமையல் சிலிண்டரின் ட்யூப்பை சேர்த்து எரிய செய்துள்ளது.

இதையறியாமல் முருகையன், அவரது மனைவி, மகள் மற்றும் அண்டை வீட்டார்களான காசிநாதன், ராஜசேகர், பழனிவேல், வேம்பையன், கலையரசி, புவனேஷ்வரன், செல்வராஜ், காளியம்மாள் உள்ளிட்டோர் தீயை அணைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இவர்கள் அனைவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள், காயமடைந்தவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மூன்று பேரையும், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஏழு பேரையும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனிவேல், காசிநாதன், வேம்பையன் ஆகிய மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த திருவோணம் காவல் நிலைய போலீசார், தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் பற்றிய தீயை அணைக்க உதவி செய்ய சென்று மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் திருவோணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.