×

420 கி.மீ. தொலைவில் 'மோந்தா'... தரைக்காற்று, கனமழை பெய்யும்! எச்சரிக்கும் வானிலை மையம்

 

சென்னைக்கு கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவில் மோந்தா புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் அமுதா கூறுகையில், “மோந்தா புயலால் தமிழ்நாட்டுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும். இத்துடன் 30-40 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோந்தா புயல் நகரும் வேகம் சற்று குறைந்தது. 6 மணிநேரமாக மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி புயல் நகர்கிறது. முன்னதாக 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மோந்தா புயல் தற்போது மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வேகத்தை குறைத்துள்ளது. 

சென்னைக்கு கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவில் மோந்தா புயல் மையம் கொண்டுள்ளது. நாளை அதிகாலை தீவிரம் அடைந்து நாளை மாலை அல்லது இரவுக்குள் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது.மோந்தா புயல் கரையை கடக்கும் நாளன்று சென்னையில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும்” என்றார்.