×

எடப்பாடி அணியே உண்மையான அதிமுக என அறிவிக்க வேண்டும்- தேர்தல் ஆணையத்தில் சிவி சண்முகம் கோரிக்கை

 

ஜூலை 11 ந் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும்  செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவுகள் தங்கள் தரப்பிற்கே சாதகமாக இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியே உண்மையான அ.தி.மு.க என்ற முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் நேரில் கோரிக்கை வைத்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இடையே கட்சியை கைப்பற்றுவதற்கான போட்டி மட்டுமில்லாமல் தலைமைக்கான போட்டி யும் நீடித்து வரும் நிலையில்  மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் டெல்லியிலுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்றார்.  ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முக்கிய முடிவுகளை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்த சி.வி.சண்முகம்  செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “கடந்த ஜூலை 11 ஆம் தேதி அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் கட்சி விதியில் செய்யப்பட்ட திருத்தம் உள்ளிட்டவை  13.07.2022 அன்று தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்சியாக  2,532 உறுப்பினர்களின்  பிரமாண பத்திரமும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  அதன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரத்தில் நீதிமன்றம் சென்றதால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கொடுத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு 11.07.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லும்,இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுத்தத செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரில் வலியுறுத்தி உள்ளோம். தேர்தல் ஆணையமும் உரிய பரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது” எனக் கூறினார்.