இபிஎஸ் அவர்களே இதெல்லாம் நியாயமா? ஏன் உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா? இது தான் நீங்கள் கட்சி நடத்தும் லட்சணமா?- சி.வி.சண்முகம்
ஆட்சி மாறிவிட்டது காட்சி மாறிவிட்டது ஆனால் படம் அதே படம்தான். விழுப்புரத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றுகிறார்கள் என சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். செஞ்சி காவல் நிலையத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முறையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம், “எனக்கும் ஈபிஎஸ்க்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம், என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள், ஆனால் அதிமுக பெண்கள் மீது சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வருவதை நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த நிலையை ஜெயலலிதா இருந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். இவை அனைத்தையும் மக்களும் அதிமுக தொண்டர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மாவை நம்பி வந்த பெண்களை தரக்குறைவாக அவமானப்படுத்தி செய்திகளை பரப்புகின்ற நபர்களை ஊக்குவிக்கின்ற தலைமை.. எடப்பாடி பழனிசாமி அவர்களே இது உங்களுக்கு அழகா..? ஏன் உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா..? நியாயமா இதெல்லாம்..? இது தான் நீங்கள் கட்சி நடத்தும் லட்சணமா..? இந்நேரம் அம்மா இருந்திருந்தால் உங்கள் நிலைமை என்னவாயிருக்கும்? இதை காவல்துறை வேடிக்கை பார்ப்பதா..? நல்லாட்சி தர வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார். ஆனால், அவருக்குக் கீழேயுள்ள அலுவலர்கள் மாறவில்லை... காட்சி மாறிவிட்டது, ஆட்சி மாறிவிட்டது, ஆனால் அதே படம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. விழுப்புரத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றுகிறார்கள். பலமுறை புகார் அளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.