கடலூர் ரயில் விபத்து: ஆங்காங்கே நிறுத்தப்பட்ட முக்கிய ரயில்கள்..
கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து காரணமாக பல முக்கிய ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளது. அப்போது வழியில் இருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, அவ்வழிய்டே சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் பள்ளி வேன் மீது அதிவேகமாக மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டதோடு, வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த கோர விபத்தில் நிவாஸ்(12) , சாருமதி (16) இரண்டு பள்ளி குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தானது சிதம்பரம் - கடலூர் வழித்தடத்தில் வேப்பர்ஸ் குவாரி ரயில் நிலையத்திற்கும் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த ரயில் விபத்து காரணமாக. பல முக்கிய ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி - தாம்பரம் ரயில், மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள்ரயில் ஆலம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வாரத்தின் ஐந்து நாட்களும் இயக்கப்படும் சென்னை தாம்பரத்திலிருந்து திருச்சி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், தண்டவாளங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன்பின்னரே இவ்வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.