கடலூர் பள்ளி வேன் விபத்து: கேட் கீப்பர் சிறையிலடைப்பு..
கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு காரணமான கேட் கீப்பர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் - கடலூர் ரயில் வழித்தடத்தில் வேப்பர்ஸ் குவாரி ரயில் நிலையத்திற்கும் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே செம்மங்குப்பம் என்னும் பகுதியில் ரயில்வே கிராசிங் கேட் ஒன்று அமைந்துள்ளது. நேற்று காலை இந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது , ரயில் மோதி விபத்துக்குள்ளானது. 95 கிமீ வேகத்தில் ரயில் மோதிய நிலையில், 50 மீட்டர் தூரத்திற்கு பள்ளி வேன் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. அத்துடன் வேனில் இருந்த மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். வேன் ஓட்டுநர் உள்பட 5 பள்ளி குழந்தைகள் வேனில் பயணம் செய்த நிலையில் , இந்த கோர விபத்தில் 6 வகுப்பு படித்து வந்த நிவாஸ்(12) என்கிற மாணவனும், 11ம் வகுப்பு படித்து வந்த சாருமதி (16) என்கிற மாணவியும், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் சிகிச்சை பெற்றுவந்த மாணவி சாருமதியின் சகோதரர் செழியன்(15) என்கிற மாணவனும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஓட்டுநர் மற்றுமொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்திற்க்கு ரயில்வே கேட் மூடப்படாதது தான் காணரம் என தெரியவந்துள்ளது. கேட் கீப்பர் பங்கஜ் குமார் சர்மா அலட்சியமாக தூங்கிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து கேட் கீப்பரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
முதலில் கிராசிங் கேட்டை மூட மூயற்சித்தபோது, தண்டவாளத்தைக் கடந்து சென்றுவிடுகிறேன் என ஓட்டுநர் வற்புறுத்தியதாகவும், அதன்பேரிலேயே கேட்டை மூடாமல் பள்ளி வேனை மட்டும் அனுமதித்ததாக கூறிய கேட் கீப்பர், பின்னர் இருசக்கர வாகன ஓட்டிகள் கேட்டதால் கேட்டை திறந்ததாக கூறினார். இந்நிலையில் போலீஸாரின் தீவிர விசாரணையில் நிறைய வாகனங்கள் காத்திருந்ததாகவும், அதனாலேயே கேட்டை திறந்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார். தொடர்ந்து மாறி மாறி வாக்குமூலம் அளித்து வருகிறார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட கேட் கீப்பர் பங்கஜ் குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.