×

கடலூர் : வேன் ஓட்டுநராலே விபத்து - ரயில்வே துறை விளக்கம்..!

 

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது.  

கடலூர் மாவட்டம்  சிதம்பரம் - கடலூர் ரயில் வழித்தடத்தில்  செம்மங்குப்பம்  என்னும் பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது.  இன்று காலை  7.45 மணியளவில் இவ்வழியே பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பள்ளி வேன்,  திறந்திருந்த  ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது அவ்வழியே  சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் பள்ளி வேன் மீது அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டதோடு, வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.  இந்த கோர விபத்தில் நிவாஸ்(12) , சாருமதி (16) இரண்டு பள்ளி குழந்தைகள் உயிரிழந்தனர். அத்துடன் ரயில்வே கேட் அருகே நின்றிருந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

வேன் ஓட்டுநர் மற்றும் 6 பள்ளி குழந்தைகள்  படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதிக் செழியன் என்கிற மாணவன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  விபத்தில் சிக்கிய பள்ளி வேன் முழுவதுமாக உருக்குலைந்து போயுள்ளது.  மாணவர்களில் பேக் மற்றும் பாடப்புத்தகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன.  இந்த விபத்தானது  சிதம்பரம் - கடலூர் வழித்தடத்தில்  வேப்பர்ஸ் குவாரி ரயில் நிலையத்திற்கும்  ஆலப்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.  

இந்த விபத்து நேர்ந்த போது  ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது.  ரயில்வே கேட்டை மூடுவதற்காக பணியில் இருந்த ரயில்வே கேட் கீப்பரான வடமாநில இளைஞர் பஞ்சஜ் சர்மா , ரயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டதே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்பட்டது. அவர் பணியின்போது தூங்கியதாகவும் குற்றம்சாட்டிய பொதுமக்கள் ,  ரயில்வே கேட் கீப்பர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் ரயில்வே காவல்துறையினரின் விசாரணையில் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.  கேட் கீப்பர் கேட்டை மூட மூயற்சித்தபோது, தண்டவாளத்தைக் கடந்து சென்றுவிடுகிறேன் என ஓட்டுநர் வற்புறுத்தியதாகவும், அதோடு வேகமாக தண்டவாளத்தை கடக்க முயன்றதே விபத்துக்கு காணரம் என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.