×

கடலூரில் நாளை முழு அடைப்பு கிடையாது...கடைகள் வழக்கம் போல் திறக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

 

என்.எல்.நி. நிறுவனத்தை கண்டித்து கடலூரில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாளை வழக்கம் போல் கடைகள், வணிகள் நிறுவனங்கள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்ட உழவர்களின் நிலங்களை பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தையும், அதற்கு துணையாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கடலூர் மாவட்ட பா.ம.க. சார்பில் நாளை (சனிக்கிழமை) கடலூர் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. நாளைய முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என குறிப்பிட்டு இருந்தார். 

இதனால் கடலூர் மாவட்டத்தில் நாளை கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படுமா? பேருந்துகள் ஓடுமா? என்ற கேள்விகள் பொதுமக்களிடம் எழுந்தது.  இந்நிலையில் இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் நாளை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வழக்கம்போல் பேருந்துகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கும். கடைகளும் திறக்கப்படும். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியினருடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இது மட்டுமின்றி என்.எல்.சி. நிர்வாகத்திடம் கூடுதல் இழப்பீடு பெற்று ஒப்புக்கொண்டவர்களின் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படுகிறது. அனைவரின் நிலமும் கையகப்படுத்தப்படவில்லை. ஆகையால் உரிய பாதுகாப்புடன் நாளை வணிக நிறுவனங்களும், பேருந்துகளும் இயங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.