“காங்கிரஸ் மட்டும் இல்லையென்றால் திமுகவால் 25 தொகுதிகளை கூட வெல்ல முடியாது இதான் கள நிலவரம்”- நிர்மல்குமார்
காங்கிரஸ் மட்டும் இல்லை என்றால் திமுகவால் அதிகபட்சம் 25 தொகுதிகளை தாண்ட முடியாது என தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றி கழக தலைவர் அறிவுறுத்தல் படி நேற்று 234 தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. எங்களது தலைவர் அறிவுறுத்தல் படி தேர்தலுக்காக தயாரிப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறோம். திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி கும்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பாஜக தமிழகத்தில் வெறுப்பு அரசியல் மற்றும் மத அரசியலை கைவிட வேண்டும். தமிழக மக்கள் அமைதியை விரும்பும் மக்கள். இதை எப்போதும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். சட்டம் ஒழுங்கு கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் சந்திப்பை தடுக்க முற்பட்டு இருக்க வேண்டும். இதை முதலமைச்சர் செய்யாதது கண்டிக்கத்தக்கது. திருப்பரங்குன்றம் அமைதியான பகுதியாக இருக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் மக்கள் விரும்புகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கள நிலவரம் என்ன என்பதைத்தான் கிரிஷ் சோடங்கர் தெரிவித்து உள்ளார். தமிழக மக்கள் விரும்பும் கட்சி காங்கிரஸ் கட்சி. இந்தியாவை இணைக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி. 25 வருஷம் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மரியாதையை தான் கேட்கிறது. அந்த மரியாதை கூட இல்லாத நிலையில் தான் இது போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை ஏற்படுத்தியது திமுக தான். காங்கிரஸ் மட்டும் இல்லை என்றால் திமுகவால் அதிகபட்சம் 25 தொகுதிகளை தாண்ட முடியாது. கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்தால் திமுகவிற்கு பயம். அந்த பயத்தில்தான் எல்லாரையும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு உள்ளார்கள். திமுக என்ன முயற்சி எடுத்தாலும் இந்த தேர்தல் அவர்களுக்கு ஆதரவாக இருக்காது. தமிழக வெற்றிக் கழகத்தில் எதுவும் காலதாமதம் இல்லை” என்றார்.