கரூருக்கு விஜய் தாமதமாக சென்றது ஏன்?- நிர்மல்குமார் விளக்கம்
போக்குவரத்தை முறையாக காவல்துறை ஒழுங்கு செய்யாததே விஜய் தாமதமாக செல்ல காரணம் என தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “கரூர் நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்புகளை அரசியலாக்க தவெக விரும்பவில்லை. விஜய் வாகனத்தை சுற்றியிருந்த வாகனங்களை அகற்ற வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. ஒரு மணி நேரத்தில் கடக்கக்கூடிய இடத்தை கடக்க எங்களுக்கு ஏழு மணி நேரம் ஆனது. போக்குவரத்தை முறையாக காவல்துறை ஒழுங்கு செய்யாததே தாமதத்திற்கு காரணம். அன்று காலதாமதத்திற்கு காரணம் என்ன என்பது உடன் பயணித்த பத்திரிக்கையாளர்கள் ஆகிய உங்களுக்குத் தெரியும். தலைவரின் வாகனத்தைச் சுற்றி 2500 டூவீலர்கள் இருந்தது.
உள்ளரங்கில் நடக்கும் கூட்டத்துக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வோம். பொது இடத்தில் நடக்கும் கூட்டத்துக்கு காவல்துறைதானே எல்லா பாதுகாப்புகளையும் செய்து கொடுக்க வேண்டும்? அதற்காகத்தானே நாங்கள் முறையாக அனுமதி கேட்டிருந்தோம்? கரூரில் காவல்துறையினர் எதற்காக தடியடி நடத்தினர்? அமைதியான கூட்டத்தில் எதற்கு தடியடி? இதுசம்பந்தமாக மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டிருக்கிறோம்" என்றார்.