×

நாளை முழு ஊரடங்கு - காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்!!

 

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 8,981 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27லட்சத்து 76 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. 

அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா  மூன்றாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதன் காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அசைவப் பிரியர்கள் அசைவம் சமைத்து உண்ணுவது வழக்கம்.  அந்த வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  என்பதால் சனிக்கிழமை இன்று மீன் வாங்க கூட்டம் அலைமோதியது. காசிமேடு பகுதியில் திருவிழா போல பொதுமக்கள் கூடியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர் . 

இருப்பினும் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும்,  இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இருப்பினும் அதிகாலை முதலே மீன் வாங்க அசைவப் பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். ஏராளமானோர் ஒரே சமயத்தில் காசிமேடு மீன் சந்தையில் குவிந்ததால் தொற்று பரவல்  அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.  அதேசமயம் வியாபாரிகள் தொடர்ந்து ஒலிபெருக்கிகள் மூலம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முககவசம் அணியவும் அறிவுறுத்தி வருகிறார்கள்.