#BREAKING சேலம் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்ட நெரிசல்
சேலம் சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில், தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நண்பகல் 12 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டார். முன்னதாக பாஸ் வைத்திருந்த நிர்வாகிகள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், விஜய் மைதானத்திற்குள் வந்ததும் கூட்டம் அதிகளவில் திரண்டது. இதனால் போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி, தடுப்புகளை தாண்டி சில இளைஞர்கள் எகிறிக் குதித்தும், முண்டியடித்துக் கொண்டும் தள்ளுமுள்ளுவுடன் உள்ளே நுழைந்தனர். மேலும், நுழைவாயில்களில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை சாலையில் தள்ளிவிட்டு, ஒரே கூட்டமாக மைதானத்திற்குள் நுழைந்ததால் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறிய நிலை ஏற்பட்டது.
கூட்டம் முடிந்து வெளியேறும் போதும், அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் ஓடி வந்ததால் சிலர் கீழே விழுந்தும், ஒருவர் மீது ஒருவர் விழுந்தும், தடுப்புகள் மீது ஏறி எகிறிக் குதித்தும் சென்ற காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.