×

"5 ஏக்கருக்குள் நிலம் இருந்தால் மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி" - உறுதிசெய்தது சுப்ரீம் கோர்ட்!

 

2016ஆம் ஆண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அதில் 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த மதுரைக்கிளை நீதிமன்றம், 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமில்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி சலுகை வழங்கும் வகையில் அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இதற்கான உத்தரவை 3 மாதங்களுக்குள் தமிழ்நாடு அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. அய்யாக்கண்ணு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடுகையில், விவசாயிகள் வழக்கு விசாரணை முடியும் வரை 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளிடமிருந்து கடனை வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அரசு தரப்போ, அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என வாதாடியது. அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அதன்படி அரசின் கொள்கை முடிவு செல்லும் என்று கூறி மதுரைக்கிளையின் தீர்ப்பை ரத்துசெய்தனர்.