பதவியேற்ற முதல் நாளே விமர்சனங்களா? - முதல்வர் விஜய்க்கு ஆதரவாக இயக்குநர் சேரன் பதிவு..!
இயக்குநர் சேரன் தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இவர் இயக்கிய பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட படங்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பமான படங்களின் பட்டியலில் உள்ளன.
30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் இருப்பவர் இறுதியாகத் திருமணம் என்கிற படத்தை இயக்கியிருந்தார். அப்படங்கள், நல்ல விமர்சனங்களையே பெற்றது. தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து படம் இயக்கத் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் விஜய் பதவியேற்றதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
மரியாதைக்குரிய மக்களே... அனைத்து மக்களையும் சேர்த்துதான்.. கட்சி பேதமின்றி சொல்கிறேன்.. நீண்ட பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் ஒருவரை நம்பி ஒரு பகுதி மக்கள் முதல்வர் என வாக்களித்து மறு பகுதி மக்கள் அதற்கு ஆதரவும் தந்து முதல்வர் நாற்காலியில் அமரவைத்தும் பார்த்தாகிவிட்டது.. மக்களும் முழுக்கவே அனைவரும் புதியவர்கள் வேண்டும் என தெரிந்துதான் இந்த வாக்கை அளித்திருக்கிறார்கள்.. பதவிப்பிரமானம் முடிந்தவுடனேயே விமர்சனங்களை முன் வைக்காமல் வாழ்த்திவிட்டு அமைதிகாப்பதே நன்று.. அதற்குள் தமிழ்த்தாய் பின்னால் போய்விட்டாள், 200 யூனிட் கரண்ட் என்னாச்சு என முழங்காமல் கொஞ்சம் வேலை செய்ய விடலாம்.. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தில் விஜய் போடச்சொல்லி இருப்பாரா... 200 யூனிட் ஃபிரி என்பதில் என்ன குளறுபடி இதெல்லாம் முதல் நாளிலேயே கேட்கலாமா...
அவர்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் முறையாக ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும்.. விஜய் முழுக்க முழுக்க புதியவர்.. அவருக்கு இந்த அரசியல் சட்ட திட்டங்கள் நுணுக்கமாக புரிய நாட்களெடுக்கும்.. பொறுத்திருங்கள்.. அவர் புரிந்து நன்றாக செயல்பட்டுவிட்டால் நல்லதுதானே.. அப்படி இல்லையென்றால் மக்களே புரிந்து மாற்றிவிடுவார்கள் தானே...
இதை நான் யாருக்கு ஆதரவாகவும் வாசிக்கவில்லை... இல்லை உடனே விஜய்க்கு ஜால்ரா போடுறேன்னு சொல்லக்கூடாது... விருப்பு வெறுப்புகளை துறந்து பொதுவான ஒரு அமைதியான சமூகம் உருவாக வழி அமைப்போம் என்பதற்காகத்தான் இந்த பதிவு..
முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. நல்ல சமுதாய கட்டமைப்பை உருவாக்க உங்கள் அர்பணிப்பை தாருங்கள்..என பதிவித்துள்ளார்.