“ஜெம் வீரமணி வழக்கை முடிக்க அறிக்கை சமர்பித்தது தவெக அரசுதான்”- சண்முகம்
ஜெம் வீரமணியின் போக்சோ வழக்கை தாமாக முன்வந்து வெளிக்கொண்டு வந்தது போல் தோற்றத்தை உருவாக்க தவெக அரசு முயற்சிப்பதாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், “ஜெம் வீரமணி வழக்கை தவெக அரசு வெளிக்கொண்டு வந்ததாகச் சொல்வது தவறு, இந்த வழக்கை தவெக அரசு முடிக்கப் பார்த்தது. ஜெம் வீரமணி வழக்கில் இப்போது இருக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளது. தவெக அரசு ஏதோ தானாகவே முன் வந்து இந்த வழக்கை நேர்மையான முறையில் நடத்துவதை போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் இப்போது இருக்கக் கூடிய தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கையில், இந்த வழக்கை முடித்துக் கொள்வது என்கிற மொழியில்தான் இருந்தது. தங்களால்தான் இந்த வழக்கு தீவிரப்படுத்தப்படுகிறது என்று தவெகவினர் சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை முதலில் நான் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். எனவே ஜெம் வீரமணி வழக்கு தீவிரப்படுத்தப்படுவதற்கும், பலர் கைது செய்யப்பட்டதற்கும் அடிப்படையாக இருப்பது போக்சோ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதிதான் என்பதை நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.