கடும் வெள்ளப்பெருக்கால் குற்றால அருவி கரை சேதம்
குற்றாலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்கால் அருவி கரையின் பெரும் பகுதி சேதமடைந்தது. தொடரும் வெள்ளப்பெருக்கால் குளிக்க விதிக்கப்பட்ட தடை ஐந்தாவது நாளாக நீடிக்கிறது.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிய தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த தொடர் பலத்த மழை காரணமாக குற்றால அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால் அருவிக்கரையில் பெண்கள் குளிக்கும் பகுதி மற்றும் உடை மாற்றும் அறை,ஆகியவை கடுமையான சேதம் அடைந்தது.
அருவிக்கரை செல்லும் பாலத்தின் ஒரு பகுதியில் பாதுகாப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சன்னதி பஜாரில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பல பொருள்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனிடையே குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று ஐந்தாவது நாளாக நீடிக்கிறது. அருவிக்கரைகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.