5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றம்... கதறி அழுத போக்சோ குற்றவாளி
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே 5 வயது சிறுமையை பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்திய சிறுமி தந்தையின் நண்பரான 55 வயதுடைய நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியை வீட்டில் தாத்தாவின் பொறுப்பில் விட்டுவிட்டு பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களது வீட்டிற்கு குழந்தையின் தந்தையின் நண்பரான புதுக்கோட்டை மாவட்டம் எரிச்சியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது மகன் பன்னீர்செல்வம் (55) என்பவர் வந்துள்ளார். அப்போது குழந்தையின் தாத்தா தேநீர்கடைக்குச் சென்ற நேரத்தில் தனியாக இருந்த 5 வயது குழந்தையை பாலியல் தாக்குதல் செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு குழந்தையின் தாத்தா திரும்பிவிடவே இயல்பாக பன்னீர்செல்வம் இருந்ததாக காட்டிக் கொண்டுள்ளார். இதன் பின்னர் குழந்தையின் பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய உடன் குழந்தை தாய் தந்தையிடம் தனக்கு நடந்ததை கூறியுள்ளது. இதனையடுத்து உடனடியாக குழந்தையின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 5 வயது குழந்தையை பாலியல் தாக்குதல் செய்த பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது.
இந்நிலையில் தான் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் பன்னீர்செல்வத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகாலம் சிறை தண்டனையும் 13,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண வழங்கவும் நீதிபதி கனகராஜ் உத்தரவிட்டார். இதனை அடுத்து குற்றவாளி பன்னீர்செல்வம் காவல்துறை பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது காவல்துறையினர் அவரை அழைத்துச் செல்லும் பொழுது நான் தப்பு எதுவும் செய்யவில்லை என்று குற்றவாளி பன்னீர்செல்வம் கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.