×

அழுகிய நிலையில் தம்பதி உடல் மீட்பு.. நாமக்கல் அருகே அடுத்தடுத்து நிகழும் சோகம்..

 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் இருந்து அழுகிய நிலையில் தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த இருக்கூர்  பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடக்கு செல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரவி. இவருடைய மனைவி வாசுகி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.  இந்த நிலையில் தம்பதி இருவரும்  ராசாபாளையம் டோல்கேட் பகுதியில்  வாடகை வீட்டில்  தனியாக வசித்து வந்துள்ளனர்.    மேலும், வடக்கு செல்லம்பாளையத்தில் நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து,  அங்கே ரவி பாக்கு மட்டை சம்பந்தப்பட்ட தொழில் செய்து வந்துள்ளார்.  அவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அவர்கள் வசித்து வந்த ராசாபாளையம் டோல்கேட் பகுதியில் உள்ள வீடு கடந்த 2 நாட்களாக மூடிக்கிடந்துள்ளது.  அதேநேரம் கடந்த இரண்டு நாட்களாக மூடிக்கிடந்த வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால்  பக்கத்து வீட்டினர் ஜன்னல் வழியே பார்த்தபோது வீட்டில் சடலங்கள் கிடந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சி அக்கம்பக்கத்தினர்  காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அழுகிய நிலையிலிருந்த  தம்பதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கடன் அல்லது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பன்னைவீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி, நகைக்காக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி மற்றும் சோகத்திலிருந்தே அப்பகுதி மக்கள் மீளாத நிலையில், தற்போது தம்பதி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.