×

திருப்பதியில் 13 மாத பெண் குழந்தையை கடத்தி ரயிலில் பிச்சை எடுக்க வைத்த தம்பதி!

 

திருப்பதியில்  13 மாத பெண் குழந்தையை கடத்தி சென்று ரயிலில் பிச்சை எடுக்க பயன்படுத்தி விற்பனை செய்த வேலூரை சேர்ந்த தம்பதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்த சுசித்ரா -  மஸ்தான் தம்பதியினரின்  15 மாத ஜெயஸ்ரீ என்ற பெண் குழந்தையுடன் சிறிது காலமாக திருப்பதி சிந்தலச்செருவு அருகே ஒரு குடிசையில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதி திருப்பதியைச் சுற்றி குப்பைகளில் பிளாஸ்டிக், காகிதங்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்து  வருகின்றனர். இந்தநிலையில் இவர்களது குழந்தை ஜெயஸ்ரீ கடந்த 21 ம் தேதி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த  நிலையில் காணாமல் போனதால் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. குழந்தையுடன் அவர்கள் குடிசையின் அருகே இருந்த அதே தொழிலை செய்து வசித்து வந்த வேலூரை சேர்ந்த முருகன் மற்றும் மரியம்மா என்ற தம்பதியினரும் காணாமல் போனதால் குழந்தையில் பெற்றோர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. சுப்பராயுடு  குழந்தையை பாதுகாப்பாக மீட்க இன்ஸ்பெக்டர் சீனிவாசுலு தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து  உத்தரவிட்டார். இதனையடுத்து  போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து சி.சி.கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில்  ​​  முருகன் மற்றும் மரியம்மா குழந்தையுடன் பைக்கில்  கடத்திச் சென்றது பதிவாகி இருந்தது. 

இதனையடுத்து  கடத்தப்பட்ட தம்பதியினர் வேலூர் என்பதால் அந்த தகவலை வைத்து மொபைல் சிக்னல் ஆதாரமாக விசாரணை செய்ததில் வேலூர் விருதம்பட்டு அருகே இருப்பதை அறிந்து அங்கு சென்ற போலீசார் மரியம்மா  முருகனை பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில் குழந்தையை கடத்தி வந்த பிறகு காட்பாடியில் இருந்து ஈரோடு வரை ரயிலில் கொண்டு சென்று பிச்சை எடுத்து வந்த பின்னர் வேறு சிலருக்கு விற்றதாக தெரிவித்தனர். இதனையடுத்து மரியம்மா, முருகன் தம்பதியுடன் குழந்தையை பெற்ற சந்திரம்மா, சின்ன கண்ணன், ஜெயபால் ராஜா, அனியம்மன் ஆகியோரை கைது செய்து குழந்தையை போலீசார் மீட்டு திருப்பதிக்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.25,271 பணம் மற்றும் ஒரு டிவிஎஸ் எக்செல் பைக்  பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் இதற்கு முன்பு குழந்தை கடத்தலில் ஈடுப்பட்டார்களா என நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் காவலில் எடுத்து விசாரிக்கப்படும் என  கூடுதல் எஸ்பி ரவி மனோகரச்சாரி தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் விழிப்புடன் இருக்கவும், சிறு குழந்தைகளை தனியாக விடக்கூடாது, யாராக இருந்தாலும் அந்நியர்களை நம்பக்கூடாது என்றும்  வேண்டுகோள் விடுத்தார்.