×

"நள்ளிரவில் மாணவிகளை அழைத்து... தாளாளர் பாலியல் சீண்டல்" - கல்லூரிக்கு சீல்!

 

திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி அருகே அமைந்துள்ளது சுரபி நர்சிங் கல்லூரி. இக்கல்லூரியின் தாளாளராகவும் அமமுக அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் இருப்பவர் ஜோதி முருகன். இவர் கடந்த மக்களவை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். திடீரென நள்ளிரவில் கல்லூரிக்கு வரும் ஜோதி முருகன் மாணவிகளை தனது காரில் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதற்கு வார்டன் அர்ச்சனாவும் உடந்தை என மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இச்சூழலில் நேற்று விடுதியை விட்டு வெளியேறிய 200க்கும் மேற்பட்ட மாணவிகள் திண்டுக்கல்-பழனி ரயில் பாதையை முற்றுகையிட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபின், அங்கிருந்து கலைந்து சென்று திண்டுக்கல்-பழனி சாலையில் மாலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2ஆம் நாளாக இன்று கல்லூரி வளாகத்திற்குள்ளே போராட்டம் நடத்தினர்.

கல்லூரிக்கு விடுமுறை அளித்தபோதும் செல்லாத மாணவிகள், கல்லூரி நிர்வாகம் வசூலித்த கல்லூரிக் கட்டணத்தை திரும்ப தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டார மருத்துவ இயக்குனர் கொண்ட குழு பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் கல்லூரி வகுப்பறைகள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன. ஜோதிமுருகன் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவாகியுள்ளார். வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.