×

 சென்னை ஐஐடியில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

 

சென்னை ஐஐடியில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் 3 ஆவது அலையாக வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது 15 ஆயிரத்தை கடந்து விட்டது. இந்த சூழலில் கல்லூரி மாணவர்கள், விடுதியில் உள்ள மாணவர்கள் என பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா 3ஆம் அலை தற்போது வேகம் எடுத்துள்ள நிலையில் ஐஐடியில் பயிலும்  மாணவர்கள், ஆசிரியர்கள் என தற்போது 58பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  17 மாணவர்கள் உட்பட 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் பெரும்பாலான மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன்,  பலர்  வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். 

இது குறித்து தெரிவித்துள்ள ஐஐடி நிர்வாகம்,  ஜனவரி 1ஆம் தேதி கல்லூரிக்கு திரும்பிய மாணவர்கள் அனைவரும் ஒரு வார காலம் தனிமைப்படுத்திக் கொண்ட பின்னர், கொரோனா  இல்லை என்று சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே ஆய்வகத்திலும்,   வகுப்பிலும் அனுமதிக்கப்படுவார்கள்.  அத்துடன் வெளி மாநிலத்திலிருந்து விடுதிகளுக்கு திரும்பிய  மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் முதன்மை மருத்துவ அதிகாரியிடம் தங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் , அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தி கொண்டும்,  வழிகாட்டு நெறிகளை பின்பற்றவும் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அண்ணா பல்கலைக்கழகம் , சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி மாணவிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.