×

ரேஷன் விநியோகத்தில் தில்லுமுல்லு செய்தால் நடவடிக்கை பாயும் – கூட்டுறவுத்துறை கடுமையான எச்சரிக்கை!

 

தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. சில பணியாளர்கள், எடை குறைவாக பொருட்களை வழங்குவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா அனுப்பிய சுற்றறிக்கை:

அனைத்து இணை பதிவாளர்களும், மண்டலத்தில் உள்ள பொது வினியோக திட்ட, சார் - பதிவாளர்கள் வாயிலாக, ரேஷன் கடை விற்பனையாளர்களிடம், கார்டுதாரர்களுக்கு எடை குறைபாடின்றி, சரியான அளவில் பொருட்களை வழங்க அறிவுறுத்த வேண்டும்.

ரேஷன் கடைகளில் தொடர்ச்சியாகவும், வார அடிப்படையிலும், திடீர் ஆய்வு செய்து, தராசுகளின் துல்லியத்தன்மை மற்றும் வினியோகம் செய்யப்படும் பொருட்கள் எடையை, தணிக்கை செய்ய வேண்டும்.

முறைகேடுகளில் ஈடுபடும் விற்பனையாளர்கள், தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவதோடு, அவர்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என, கடும் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்.

மளிகைப் பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கக் கூடாது. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்குவதை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.