"சுட்டெரிக்கும் வெயிலிலும் தேன் போன்ற குளிர்ச்சி!" - மண்பானை நீரின் அறிவியல் ரகசியமும், ஆரோக்கிய பயன்களும்..!
கோடைகாலத்தில் அதிக வெப்பத்தில் இருந்து உடலைக் காத்துக் கொள்ளவும், உடல் சூட்டைக் தணிக்கவும் மண்பானை குடிநீர் பெரிதும் உதவுகிறது.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நாம் குடிக்கும் குளிர்ந்த நீர், அப்போதைக்குத் தான் சில்லென்ற உணர்வைத் தரும். ஆனால், அது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது பலரும் அறிந்த உண்மை. இருப்பினும், உடல்நலத்தை விடவும் சில்லென்ற குடிநீரைக் குடிப்பதையே மக்கள் பலரும் விரும்புகின்றனர். உடல் நலத்தைக் காக்க விரும்பினால், மண்பானை குடிநீரை அருந்துங்கள். இது தான் சிறந்த ஆரோக்கிய நடைமுறையாகும்.
வெயில் கடுமையாக இருக்கும்போது மண்பானையானது, தன்னுள் இருக்கும் நீரை அதிக அளவு குளிரச்செய்யும்.
வெளிப்புற வெப்பம் குறைவாக இருந்தால் மண்பானையில் உள்ள நீரும் மிதமான குளிர்ச்சியோடு இருக்கும். இதற்கு பின்னணியில் உள்ள அறிவியல் என்ன? மேலே படியுங்கள்...
மண்பானை என்பது இறுக்கமான மண்ணால் உருவாகி இருந்தாலும் அதில் கண்களுக்கு புலப்படாத நுண் துளைகள் உள்ளன. சுற்றுப்புற வெப்பம் மண்பானையை தாக்கும்போது மண்பானையில் இருக்கும் நுண் துளைகள் சுவாசித்தல் மூலம் நீர் வெளியே இழுக்கப்படும்.
இவ்வாறு தொடர்ந்து மண்பானை நீர் ஆவியாகிக்கொண்டே இருக்கும். இந்த செயல்முறை மூலம் பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பம் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக, மண்பானையில் உள்ளே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது. அதாவது, வெளிப்புற வெப்பம் அதிகமாக இருக்கும் போது அந்த வெப்பத்தின் காரணமாக மண்பானை நீர் ஆவியாதல் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்த ஆவியாதல் மூலமாக வெப்பம் தொடர்ந்து வெளியேற்றப்படும்போது பானைக்குள் இருக்கும் நீர் குளிர்ச்சியாக மாறுகிறது.
பொதுவாக, ஒரு மண் பானை அது இருக்கும் அறை வெப்ப நிலையை விட 5 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பநிலை அளவுக்கு நீரை குளிர்விக்கும். வெளிப்புறத்தில் வெப்பம் 35 டிகிரி செல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.
மண் பானை சுவாசிப்பதால் நீரில் உள்ள கெட்ட உப்புகள் வடி கட்டப்படுவதால் நீர் தூய்மையாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மண் பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணி நேரம் வைத்திருந்த பின்னர் குடிக்க வேண்டும். பானை தண்ணீரில் உள்ள அனைத்து மாசுப் பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச்சிறந்த வாட்டர் பில்டர் என்றால் அது மண்பானைதான் என்று சொல்ல வேண்டும்.
மண்பாண்டப் பொருள்களை தொடர்ந்து பயன்படுத்துவது, நமது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என சித்த மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். மண்பானை குடிநீரில் தூசிகள் உள்பட நம் கண்ணுக்குத் தெரியாத நச்சுகள் ஏதேனும் இருந்தால், மண்பானை அவற்றையெல்லாம் வடிகட்டி நன்னீராக மாற்றிக் கொடுக்கிறது.
மண்பானையில் தண்ணீர் வைத்து குடிப்பது மட்டுமின்றி, சோறு செய்வதும், மண் சட்டியில் குழம்பு வைத்து சாப்பிடுவதும் மிகவும் நல்லது. முன்பெல்லாம் செம்பு பாத்திரம் மற்றும் மண்பானையில் தான் சோறு செய்து சாப்பிடுவார்கள். ஆனால், இன்று அந்த பழக்க வழக்கம் முற்றிலும் மறைந்து விட்டது. உடல் நலனில் அக்கறையுடன் இருக்க நினைத்தால், தற்போது மறைந்த பழக்கத்தை நிச்சயமாக மீட்டெடுக்க வேண்டும்.
புதிதாக மண்பானை வாங்கியதும் அதில் தண்ணீர் ஊற்றி உடனே குடிக்கக்கூடாது. 10 நாட்கள் தண்ணீரை மாற்றி மாற்றி ஊற்றிய பின்னர், தினமும் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். கோடைக்காலத்தில் பானை நீரை அருந்தினால் தேன் போன்ற இனிமையான சுவை இருக்கும்.
மண் பானைகளில் சேமித்து வைத்த தண்ணீரை குடிப்பது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.
கோடை காலங்களில் பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த தண்ணீரை பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வெயிலுக்கு மண்பானை நீரை அருந்தினால் தேன் போன்று இனிமையான சுவையுடன் இருப்பது மட்டுமின்றி உடல் சூட்டை குறைத்து உடல் ஆரோக்கியத்திற்கு வலிவகுக்கும்.
மண்பானையை தரையில் வைக்கக்கூடாது. ஆற்று மணலைக் குவித்து வைத்து அதன் மேல் மண் பானையை வைக்க வேண்டும். வெட்டிவேரை பானை தண்ணீரில் போட்டு வைத்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.
பொங்கல் பண்டிகைக்கும், கோடை வெப்பத்திற்கும் மட்டுமின்றி நாள்தோறும் மண்பானையை பயன்படுத்தி வாருங்கள். இன்றைய காலகட்டத்தில் நலமுடன் வாழ இது மிகச் சிறந்த வழியாகும்.