கோயிலுக்குள் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காததால் சர்ச்சை
வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கில் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காததால் சர்ச்சை எழுந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடக்கும் குடமுழுக்கு திருவிழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். தன்னுடைய சொந்த சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசை சௌந்தரராஜனுக்கு குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், செல்வப்பெருந்தகைக்கு மறுக்கப்பட்டுள்ளது. செல்வப்பெருந்தகை 20க்கும் மேற்பட்ட நபர்களுடன் செல்ல முயன்றதால் அவ்வளவு நபர்களை அனுமதிக்க முடியாது என்று நிர்வாகம் மறுத்துள்ளதே தவிர சனாதனத்தின் பெயரால் மறுக்கவில்லை என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு பிறகு தமிழிசையுடன் செல்வப்பெருந்தகை அவர்கள் கோபுரத்தின் அருகில் பூஜை செய்ய நிர்வாகத்தால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “2 மணி நேரம் இருந்தும் வல்லக்கோட்டை முருகனை தரிசிக்க முடியவில்லை. 2000 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்னையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்துள்ளனர். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதால் மக்களோடு மக்களாக தரிசித்தேன். அதிகாரிகள் தங்களை அதிகாரிகளாக நினைத்து பணி செய்ய வேண்டும். புனித நீர் ஊற்றுவதற்கு முன் கொடியை கொடுக்காமல் அறநிலையத்துறை அதிகாரியே அசைத்தனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.