×

விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற விளம்பர பேனரால் சர்ச்சை..!

 

நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரத்தில் உள்ள அசைவ உணவகம் ஒன்றில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சலுகை விலையில் பிரியாணி வழங்கப்படுவதாக விளம்பர பேனர் வைக்கப்பட்டது. அதில் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகப் புகார்கள் எழுந்தன. 

திருநெல்வேலி மாநகரம் வி.எம். சத்திரம் பாலம் அருகே உள்ள கடை ஒன்றில், விநாயகர் சிலை பிரியாணி சமைப்பது போன்ற தோற்றத்தில் இடம்பெற்றிருந்த விளம்பர பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியது. வேற்றுமதத்தைச் சேர்ந்த கடை உரிமையாளர் வைத்திருந்ததாக கூறப்படும் இந்த விளம்பர பேனரில், விநாயகர் தொடர்பான காட்சியை பயன்படுத்தி பிரியாணி விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாக இந்துமுன்னணி அமைப்பினர் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துமுன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் திரண்டனர். மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விளம்பரம் அமைந்துள்ளதாகக் கூறி, பேனரை உடனடியாக அகற்ற வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல்துறையினர், சம்பந்தப்பட்ட விளம்பர பேனரை அகற்றினர். மேலும், விளம்பரம் தொடர்பாக கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்துமுன்னணி நிர்வாகிகளிடம் காவல்துறையினர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. 
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.