×

சர்ச்சையான போஸ்டர்..! விழிப்புணர்வு என்ற பெயரில் ரோபோ சங்கர் மறைவை தவறாகப் பயன்படுத்தலாமா..? 

 

உடல் நலக்குறைவால் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் செப்டம்பர் 18 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது.

இந்நிலையில், மது விழிப்புணர்வுக்கு எடுத்துக்காட்டாக ரோபோ சங்கரின் மறைவை ஒப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரக்கோணம் பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகளில், "என்னைத் தொட்டான், அவன் கெட்டான்" என்ற தலைப்புடன் ரோபோ சங்கரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

அது மட்டுமின்றி, சுவரொட்டியில் ‘எனக்கு மொழி, இனம், சாதி, மதம், நாடு, ஆண், பெண், இரவு, பகல், சின்னவன், பெரியவன், ஏழை, பணக்காரன், அரசன், ஆண்டி, அதிபதி, போண்டி, சர்வாதி, அடிமை இவற்றை எனக்கு பிரித்து பார்க்க தெரியாது. என்னைத் தொட்டான் அவன் கெட்டான்’ என்ற வாசகத்துடன் சேர்த்து, மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும், "விழிப்புணர்வுக்காக" என்ற வாசகம் மற்றும் "கணேசன் மளிகை" என்ற கடை பெயர், தொடர்பு எண்ணும் அந்த சுவரொட்டியில் இடம் பெற்றுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஒரு நடிகரின் மறைவை, குறிப்பாக அவர் குடும்பத்தார் இன்னும் துக்கத்தில் இருந்து மீளாத தருணத்தில், விழிப்புணர்வு என்ற பெயரில் ஒருவரின் புகைப்படத்தை இப்படி பயன்படுத்துவது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயல் எனவும், மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது சமூகத்தின் நலனுக்கான முயற்சியே. அதற்காக ஒருவரின் மரணத்தைச் சுட்டிக் காட்டி ஏற்படுத்தும் போஸ்டர்கள் தேவையா? எனவும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.தற்போது, இந்த போஸ்டர் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.