×

உண்ணாவிரதத்தில் 4 ஒப்பந்த செவிலியர்கள் திடீர் மயக்கம் - போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

 

பணி நிரந்தரம் செய்ய கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த செவிலியர்களில் 4 பேர் திடீரென மயக்கம் அடைந்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளனர்.  

தமிழகத்தில் கொரோனா கால நெருக்கடியை சமாளிப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக 2300 தற்காலிக செவிலியர்கள் தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நியமிக்கப்பட்டனர். இவர்களது பணிக்காலம் கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து பணி நீட்டிப்பு கிடையாது என அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில், இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக ஒப்பந்த செவிலியர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திலும் பணியில் அமர்த்தப்படுவார்கள்,  பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார். 

ஆனால் ஒப்பந்த செவிலியர்கள் தரப்பில் இனி தற்காலிக நர்சுகளாக வேலையில் சேர மாட்டோம். அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள். வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒப்பந்த செவிலியர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு அ.தி.மு.க.  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதேபோல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பா.ஜனதா துணைத் தலைவர் நாகராஜன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 4 செவிலியர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து நர்சுகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். அரசு எங்களுக்கு பணியை தொடருவதற்கான அரசாணையை தரும்வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என கூறியுள்ளனர்.