×

"அம்மா மருந்தகங்களை மூடி தனியாருக்கு லாபம் தேடி தர வேண்டாம்" - ஈபிஎஸ் கோரிக்கை!!

 

அதிமுக அரசின் அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல மக்கள் நல திட்டங்களுக்கு நிதி நெருக்கடியை காரணம் காட்டி திமுக அரசு மூடு விழா நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக மக்களுக்கு தரமான மருந்துகள் கிடைத்திடும் வகையில் மலிவு விலையில் மருந்துகள் அம்மா மருந்தகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அம்மா உணவகம் ,அம்மா சிமெண்ட் ,அம்மா குடிநீர், அம்மா மினி கிளினிக் ,தாலிக்கு தங்கம் திட்டம் ஆகிய மக்கள் நலத்திட்டங்களுக்கு திமுக அரசு மூடு விழா நடத்தியது.தற்போது அந்த வரிசையில் அம்மா மருந்தகங்களுக்கு மூடுவிழா நடத்த திமுக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. 


திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நிதி ஆதாரத்தை பெருக்கவும் இரண்டு வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுக்கள் என்ன செய்கின்றன ? அரசுக்கு என்ன ஆலோசனைகள் வழங்கின என்று தெரியவில்லை. வருவாயைப் பெருக்க வழி தெரியாமல் தவிக்கும் திமுக அரசு,  அதிமுக அரசால் தொடங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.  அம்மா மருந்தகங்களை மூடி, தனியார் மருந்தக‌ங்களை லாபம் கொழிக்க அனுமதிக்கும் மக்கள் நலனுக்கு எதிரான திமுக அரசு உடனே கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.