நள்ளிரவு முதல் கண்டெய்னர் லாரிகள் ஸ்ட்ரைக்..!
எல்லை சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சென்னையில் இயங்கும் 13 கண்டெய்னர் லாரி சங்கங்கள், மோட்டார் வெளிச்சம் அமைப்பில் உள்ள 75 வாகன உரிமையாளர்கள் சங்கங்கள் உட்பட அனைத்து டிரைலர், டாரஸ், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்,மோட்டார் வெளிச்சம் அமைப்பினர் லாரி உரிமையாளர்கள், டிரான்ஸ் போர்டர்ஸ் புக்கிங் ஏஜென்ட்ஸ், லாரி ஓட்டுநர்கள் ஆகியோர் இன்று நள்ளிரவு முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளனர்.
இதனிடையே கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஒருதரப்பினர் வாகன புதுப்பிப்பு கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் வாகனத்தை இயக்கும்போது வாகன ஓட்டுநர்களுக்கும், வாகனத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை காட்டுப்பள்ளி துறைமுக ஒப்பந்ததாரர்கள் கமிட்டியில் உள்ள 7 சங்கங்களை சேர்ந்தவர்கள் அதன் தலைவர் எம்எம் கோபி தலைமையில், தண்டையார்பேட்டை காவல் துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எம்எம் கோபி, "தமிழ்நாட்டில் 4 பிரிவுகளாக வாகன தரச்சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை கண்டித்து சம்பந்தப்பட்ட துறையிடம் மனு அளித்துள்ளோம். மனுவிற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சிலர் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். சென்னை துறைமுகங்களில் இயக்கப்படும் வாகனங்களில் 20 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் 15 சதவிதம் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
எங்கள் அமைப்பில் உள்ள 7 சங்கங்களை சேர்ந்தவர்கள் யாரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதில்லை. மேலும் நாங்கள் வாகனங்களை இயக்கினால் தாக்குவோம் என சிலர் எங்கள் சங்கத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, எங்களுடைய வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.
மேலும் இந்த புதுப்பிப்பு கட்டண விவகாரத்தில் அரசு முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம்” எனவும் அவர் தெரிவித்தார்.