×

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க சதி திட்டம்?- பிரபல ரவுடி கைது

 

ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடியை அரக்கோணத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க சதி திட்டம் தீட்டினரா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபால் என்கின்ற ஒற்றைக்கண் ஜெயபால் (66). இவர் மீது கொலை. கொலை முயற்சி உள்ளிட்ட 13 குற்ற வழக்குகள் உள்ளன. குறிப்பாக புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் என்கின்ற ஆற்காடு சுரேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் ஜெயபால் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர்.  மேலும் பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். ஆம்ஸ்ட்ராங்  ஜூலை 5, 2024 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு நாள் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பலர் தற்போது ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளனர். அவர்களை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக ஒற்றைக்கண் ஜெயபால் மற்றும் அவரது ஆட்கள் கொலை செய்ய ஏதாவது சதி திட்டம் தீட்டி அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை போலீசாரால் எச்சரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  ரவுடிகள் ஒழிப்பு போலீசார் ஜெயபாலை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சில ரவுடிகளோடு தொடர்ந்து ஜெயபால் பேசி வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று அரக்கோணம் பகுதியில் வைத்து ரவுடிகள் ஒழிப்பு தனிப்படை போலீசார் ஜெயபாலை நேற்று கைது செய்தனர். அவரிடம் இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து பிடிபட்ட ஜெயபாலை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். பேசின் பிரிட்ஜ் போலீசார் ஜெயபாலிடம் ரவுடிகள் தொடர்பு குறித்து விசாரணை நடத்தி கஞ்சா வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.