×

ராகுல்காந்தி, ஜோதிமணியை குறிவைத்து ஆபாச பேச்சு- செல்வபெருந்தகை கண்டனம்

 

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்  திரு.ராகுல்காந்தி எம்.பி அவர்களையும், மக்கள் பிரதிநிதியான செல்வி ஜோதிமணி எம்.பி., அவர்களையும் குறிவைத்து ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில், “கரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில் நாதன் அவர்கள், பொதுவெளியில் கண்ணியத்திற்குரிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்  திரு.ராகுல்காந்தி எம்.பி அவர்களையும், மக்கள் பிரதிநிதியான செல்வி ஜோதிமணி எம்.பி., அவர்களையும் குறிவைத்து ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, ஜனநாயக மாண்பிற்கு எதிரானது. அவரது பேச்சை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. அரசியல் கருத்து வேறுபாடு என்பது ஜனநாயகத்தின் இயல்பு. ஆனால் கருத்துக்கு பதில் கருத்து கூற முடியாத நிலையில், பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் மொழியை ஆயுதமாகப் பயன்படுத்துவது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சியையே காட்டுகிறது. பெண்களை அவர்களின் உழைப்பு, திறமை, சமூகப்பணி ஆகியவற்றை கண்டு மதிக்காமல், வெறும் பாலியல் பார்வையில் மட்டுமே பார்க்கும் மனநிலை சமூகத்திற்கே ஆபத்தானது.

ஒரு பெண் பொதுவாழ்வில் முன்னேறுவது அவரது அர்ப்பணிப்பு, போராட்டம், மக்கள் நம்பிக்கை ஆகியவற்றின் பலனாகும். அதை இழிவுபடுத்துவது தனிநபர் தாக்குதலாக மட்டும் இல்லாமல், பொதுவெளியில் செயல்படும் அனைத்து பெண்களையும் அவமதிப்பதாகும். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவைச் சார்ந்த சில தலைவர்கள் சமீபகாலமாக பெண்களை குறித்து வெளிப்படுத்தும் தரம் தாழ்ந்த கருத்துகள், பெண்களை அரசியல் மற்றும் தலைமைத்துவ இடங்களில் இருந்து ஒதுக்க முயலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய ஆபாசத் தாக்குதல்கள் மற்றும் கண்ணியத்தைச் சிதைக்கும் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் செல்வி ஜோதிமணி எம்.பி., மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். மேலும், பெண்களுக்கு எதிரான இழிவுபடுத்தும் பேச்சுக்களுக்கு எதிராக அவர் சார்ந்த பா.ஜ.க., கட்சி தலைமையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் கண்ணியம், உரிமை, சமத்துவம் ஆகியவை அரசியல் தாக்குதல்களுக்கு உரியவை அல்ல. பெண்களை மௌனமாக்க எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்பதை வலியுறுத்துகிறேன். இவ்வாறான தரக்குறைவான பேச்சுக்களை; காங்கிரஸ் பேரியக்கத்தினரால் ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.