×

எதிரியுடன் விஜய் கூட்டணி வைக்கமாட்டார் - செல்வப்பெருந்தகை

 

நடிகர் விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி இலக்கு வைத்துள்ள தொகுதிகளை விட கூடுதலாக பத்து தொகுதிகளை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெல்லும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுதந்திரப் போராட்ட வீரரும், சென்னை மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பி.எஸ். குமாரசாமி ராஜா, சமூக சீர்திருத்தவாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.பி.எஸ்.மணி ஆகியோரின் நினைவு நாளை முன்னிட்டு அவர்களது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  செல்வப் பெருந்தகை, “முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மணி அவர்களின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. விரைவில் எந்தெந்த  தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்பதை திமுகவுடன் கலந்தாலோசிக்க உள்ளோம். விரைவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார்கள் அது குறித்தும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசித்து வருகிறோம். பிரதமர் மோடி எல்லாரையும் ஏமாற்றலாம் ஆனால் தமிழ்நாட்டை ஏமாற்ற முடியாது. மேற்கு வங்கத்தில் அதிகாரிகளை  மாற்றியது போல தமிழ்நாட்டில் மாற்ற முடியாத அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னதாகவே அதிகாரிகளை மாற்றியுள்ளார். முதலமைச்சர் ஜனநாயக முறையில் மாவட்ட ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் முறைப்படி மாற்றியமைத்துள்ளார். இதனால் தேர்தல் ஆணையம் இங்கு எதுவும் செய்ய இயலாது.  

புதுச்சேரியிலும் தமிழ்நாட்டிலும் வேறு வேறு நாட்களில் தேர்தல் நடக்க காரணம் என்ன என்றும், தேர்தல் ஆணையம் யாருடைய தேர்தல் ஆணையம் அது எப்படி செயல்படுகிறது என்பதும் அனைவருக்கும் தெரியும். எந்த தேதிகளில் எந்த மாநிலத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டும் என்பதை  முடிவு செய்வது தேர்தல் ஆணையம் அல்ல அதை  முடிவு செய்வது மோடியும்   அமித்ஷாவும் தான்.தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினருக்கு நேர்காணல்கள் நடைபெற்ற வருகிறது. நியாயமான முறையில் ஜனநாயக முறையில் நேர்காணல்கள் நடைபெற்று வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் என்னை எந்த தொகுதியில் போட்டியிட சொல்கிறார்களோ அந்த தொகுதியில் போட்டியிடுவேன் ஒருவேளை என்னை போட்டியிட வேண்டாம் என்று  சொன்னால் நான் போட்டியிட மாட்டேன்.அதிமுக வெற்றி பெறும்  என்ற கருத்துக் கணிப்பு சூரியன் கிழக்கில்  உதிப்பதில்லை மேற்கில் உதிக்கும் என்று சொல்வது போல உள்ளது. நடிகர் விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி இலக்கு வைத்துள்ள தொகுதிகளை விட கூடுதலாக பத்து தொகுதிகளை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெல்லும். கொள்கை எதிரியுடன் விஜய் கூட்டணி வைக்கமாட்டார். பாஜகவை கொள்கை எதிரி என அறிவித்துவிட்டு அந்த கட்சியிடன் கூட்டணி வைப்பதை மக்கள் கேள்வி கேட்க மாட்டார்களா?” என்றார்.