“பிரவீன் சக்கரவரத்தி குறித்து காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளித்துள்ளேன்”- செல்வப்பெருந்தகை
உ.பி.யை விட அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி பேசியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “பாஜகவை ஆதரித்துப் பேசுபவர்கள் தமிழ்நாட்டு காங்கிரஸில் ஒருவர் - இருவர் இருக்கிறார்கள். அவர்கள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அவர்கள் முடிவெடுப்பார்கள். பிரவீன் சக்ரவர்த்தி தமிழ்நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக வெளியிட்ட கிராபிக்ஸ் பொய்யானது. அவர் மீடு தலைமையிடம் புகார் அளித்துள்ளேன். காட்டாட்சி நடக்கும் உ.பி.யோடு தமிழ்நாட்டை எப்படி ஒப்பிட முடியும்? திமுக- காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பிரவீன் சக்ரவர்த்தி முயற்சிக்கிறார். தமிழ்நாட்டில் தலைவர் ராகுல்காந்தி பெயரை தவறாக பயன்படுத்துவதை தமிழ்நாடு காங்கிரஸ் அனுமதிக்காது.
காங்கிரஸ்காரர்கள் ஒருபோதும் பாஜகவை தூக்கிப் பிடிக்க மாட்டார்கள். உ.பி.யை உயர்த்தி பேசுபவர்கள் பாஜகவின் குரலாகவும், ஆர்.எஸ்.எஸ். குரலாகவும் ஒலிக்கிறார்கள். தனிநபர் வளர்ச்சிக்காகவும், விளம்பரத்திற்காகவும் இதையெல்லாம் செய்கிறார்கள். INDIA கூட்டணி பலமாக இருக்கிறது. பாஜக காலூன்ற மறைமுக வேலை செய்பவர்களையும், உளவு வேலை பார்ப்பவர்களையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.