"காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி பிரச்சனையே முட்டுக்கட்டை" - வார்னிங் கொடுத்த ராகுல்காந்தி
தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி மோதலே முட்டுக்கட்டையாக உள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழாவில் உரையாற்றிய ராகுல்காந்தி, “தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி மோதலே முட்டுக்கட்டையாக உள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரசார் பல அணிகளாக பிரிந்து செயல்படுவதால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளின் செயல்பாடுகளை கட்சி தலைமை கண்காணித்துவருகிறது. கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்லாத தலைவர்களுக்கு காங்கிரசில் இனி இடமில்லை. தமிழ்நாட்டில் கோஷ்டி பூசலை தவிர்த்து, காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவே புதிய மாவட்ட தலைவர்களாக நியமித்துள்ளோம்.
தமிழ்நாட்டில் காங்கிரசுக்காக உழைப்பவர்களுக்கே இனி வரும் காலங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படும். தலைமைக்கு உண்மையாக உள்ளவர்களுக்கு மட்டுமே இனி வரும் காலங்களில் கட்சி விசுவாசம் காட்டும். கட்சி தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று பணியாற்ற வேண்டும். கட்சியின் முன்னேற்றத்திற்காக உங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.” என்றார்.