×

பைத்தியம் முத்திவிட போகிறது! அண்ணாமலையை விமர்சித்த எம்பி

 

ஆளுநர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது என எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எம்பி திருநாவுக்கரசர், “ஆளுநர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது. பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைன் சூதாட்டத்தால் பலரும் தற்கொலை செய்து கொள்வதாலும் இளைஞர் எதிர்காலத்தை கெடுப்பதாலும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு தான் தமிழ்நாடு அந்த சட்டத்தை நிறைவேற்றியது. அதை ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் 150 நாட்கள் கிடப்பில் போடப்பட்டு இப்போதுதான் அவருக்கு தெரிய வந்ததைப் போல, ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி அதை முடிவு செய்து மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு மூன்று நான்கு மாதங்களை எடுத்துக் கொள்வதா? நான்கு மாதம் ஐந்து மாதத்திற்கு ஒரு முறை தான் ஆளுநர் கோப்பு பார்ப்பாரா? 

இது வேண்டும் என்றே செய்கின்ற காலதாமதம். அரசாங்கத்திற்கு புறம்பாக செயல்படுகிறார் என்பது மட்டுமல்ல, தமிழ்நாடு அரசை தேர்ந்தெடுத்த மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதுதான் இது போன்ற செயல்கள் வெளிப்படுத்துகிறது. இது கண்டனத்துக்குரியது, இதை தவிர்க்க வேண்டியது ஆளுநர் உடைய பொறுப்பு. சட்டம் ஏற்றுவதற்கு அதிகாரம் இருக்கிறது என்பதனால் தான் அரசாங்கம் சட்டம் ஏற்றி அனுப்பப்படுகிறதுகிறது. அதைத் தெரிவிக்க கூட ஆளுநர் ஆறு மாதமா எடுத்துக் கொள்வதா?. ஆளுநர் சில விஷயங்களில் விதிகளுக்கு புறம்பாகவும், ஜனநாயக மரபுகளுக்கு முரணாகவும் ஆளுநர் நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது.

மத்தியில் ஆளக்கூடிய பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை. அவர் பொறுப்போடு பேச வேண்டும். சட்டத்தை மீறுவதோ, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. முடிந்தால் கைது செய்து பார் தொட்டுப்பார் என்று வெட்டி சவால் விடுவது எந்த வகையில் நியாயம்? இதுபோல் மாநிலத்தில் ஆட்சி செய்யக்கூடியவர்கள் முடிந்தால் மத்திய அரசை கைது செய்து பார் என்று கேட்பதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும்? இது போன்ற ஜனநாயகத்திற்கு புறம்பான சண்டித்தனமான பேச்சுக்கள் இது. ஜனநாயகத்திற்கு உரிய பேச்சுக்கள் இல்லை. சண்டியர் மாதிரி அண்ணாமலை பேசக்கூடாது. கட்சியின் தலைவர் போல பேச வேண்டுமே தவிர இது போன்ற பேச்சுக்களை அவர் தவிர்ப்பது அவரது கட்சிக்கும் அவருக்கும் நல்லது. ஒருவேளை அவரை பிடித்து சிறையில் அடைத்தால் கம்பியை உடைத்துக் கொண்டு வருவாரா? அவர் மீது வழக்கு எந்த செக்ஷனில் போட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை பிணையில் விடுவிக்க கூடிய பிரிவில் போட்டு இருப்பதால் இது போன்ற பேச்சுக்களை பேசுகிறாரா? என்றும் தெரியவில்லை.

ராகுல் காந்தி நடைபயணம் உலக சாதனையாக போற்றப்படுகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகள் வரை எந்த அரசியல் தலைவர்களும் இத்தனை நாட்கள் தொடர்ச்சியாக சிரமப்பட்டு நடைபயணம் மேற்கொள்ளவில்லை. இந்தியாவை ஒன்றிணைக்க அவர் நடைபயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டில் தாமரை மலரும் மலரும் என்று அவர்களும் சொல்லிக் கொண்டுதான் உள்ளனர். தாமரை நிறைய குளங்களில் மலர்ந்து கொண்டு தான் உள்ளது. வீட்டிலேயோ மற்ற இடங்களிலோ ஆட்சியில் மலர்வதைப் போல் தெரியவில்லை. அண்ணாமலை நான் ஜெயலலிதா போல் கலைஞர் போல் என்று பேசி வருகிறார். அவர் ஒரு பாவம். மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார், அவர் தியானத்தில் ஈடுபட வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்று பேசிக்கொண்டு வந்தால் அவருக்கு முத்திவிடும். பிறகு அவர் மோடி, அமித்ஷா, வாஜ்பாய் மாதிரி நான் என்று கூறி விடப் போகிறார்.” என தெரிவித்தார்..