×

"அனிதா ராதா கிருஷ்ணனை திமுக கண்டிக்க வேண்டும்! இல்லையேல் காங்கிரசும் பதிலடி கொடுக்கும்”- மாணிக்கம்தாகூர்

 

அனிதா ராதா கிருஷ்ணனின் பேச்சை திமுக தலைமை அங்கீகரிக்கிறதா? அவரை திமுக கண்டிக்க வேண்டும். கண்டிக்கவில்லையென்றால் காங்கிரசும் பதிலடி கொடுக்கும். அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர் தனது எக்ஸ் தளத்தில், “அமைச்சர் பதவியும் அதிகாரமும் போன பிறகு, விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலரின் மொழியின் தரம் எந்த அளவுக்கு கீழே விழுகிறது என்பதற்கான உதாரணம் தான் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு. “பொ “ என்று பேசுவது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் அல்ல, மூன்றாம் பாலினத்தவர்களையே இழிவுபடுத்தும் அருவருப்பான மனநிலையை காட்டுகிறது. சமூகத்தில் தங்களுக்கான மரியாதையும் அங்கீகாரமும் பெற போராடி வரும் ஒரு சமூகத்தை இப்படி கேவலப்படுத்துவது வெட்கக்கேடானது. நாங்கள் உங்களை அதிகாரத்திற்கு கொண்டு வர உழைத்தவர்கள்தான். 

எங்களுக்கும் திருப்பி பேச தெரியும். அரசியலிலும் பதிலடி கொடுக்க தெரியும். ஆனால் இன்னும் அரசியல் நாகரிகத்தை மதித்து திமுக தலைமையின் பதிலை காத்திருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களையும், எங்கள் மூத்த தலைவர்களையும் தொடர்ந்து தரக்குறைவாக பேசும் இந்த அரசியலை திமுக தலைமையே ஊக்குவிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. திமுக தலைமையிடம் ஒரு கேள்வி — இந்த மொழியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையெனில் உடனடியாக கண்டிக்க வேண்டும். இல்லை என்றால், இதே அரசியல் மொழியில் உங்களுக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயங்க மாட்டோம். அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எதிர்க்கட்சியினர் மீது இழிவான வார்த்தைகள் பயன்படுத்துவது அரசியல் கலாச்சாரம் அல்ல. அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி. அனிதா ராதாகிருஷ்ணன் தனது வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். திமுக தலைமையும் இதை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.