×

ராகுல்காந்தி மீது FIR பதிவு செய்திருப்பது வெட்கக்கேடானது- ஜோதிமணி

 

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அண்ணன் திரு. கார்கே அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கும், சமூகப் பாகுபாட்டிற்கும் எதிராகக் குரல் கொடுத்ததற்காக எங்கள் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் மீது FIR பதிவு செய்திருப்பது பாஜக-வின் அப்பட்டமான மனுவாத, சாதிய ஆதிக்க மனநிலையின் உச்சக்கட்டம் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில், “அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அண்ணன் திரு. கார்கே அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கும், சமூகப் பாகுபாட்டிற்கும் எதிராகக் குரல் கொடுத்ததற்காக எங்கள் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் மீது FIR பதிவு செய்திருப்பது பாஜக-வின் அப்பட்டமான மனுவாத, சாதிய ஆதிக்க மனநிலையின் உச்சக்கட்டம்! வெட்கக்கேடானது! இந்த நாட்டின் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் குரலாக நின்று தீண்டாமைக்கு எதிராகப் பேசுவது குற்றமா? சாதியப் பாகுபாட்டிற்கு எதிராகப் பேசுபவர்களைக் குற்றவாளிகளாக்குவதும், சாதிய அநீதிகளைக் காப்பாற்றுபவர்களுக்கு அரசு ஆதரவு தருவதும்தான் மோடி அரசின் 'வளர்ச்சி மாடலா'?

அண்ணல் அம்பேத்கர் தந்த அரசமைப்புச் சட்டத்தையும், சமத்துவக் கோட்பாடுகளையும் காலில் போட்டு மிதிக்கும் இந்த மனுவாதக் கூட்டத்தைப் பார்த்து நான் கேட்க விரும்புவது: ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக்காக நீங்கள் எப்போதாவது ஒரு துரும்பையாவது அசைத்தது உண்டா? சமத்துவத்திற்காகப் போராடிய ஒரு வரலாற்றுத் தியாகத்தையாவது உங்களால் காட்ட முடியுமா? முடியாது! ஏனென்றால் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்துவதே உங்கள் சித்தாந்தம். பாஜக அரசுக்கு நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்கிறோம், எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், மிரட்டல்களுக்குப் பயந்து பின்வாங்குவதற்கு நாங்கள் ஒன்றும் உங்கள் அடிமைகள் அல்ல; பெரியாரும் அம்பேத்கரும் காந்தியும் விதைத்த சமத்துவக் களத்தில் நிற்பவர்கள்! ராகுல் காந்தி அவர்களின் சமூக நீதிக்கான சமரசமற்ற குரலை உங்களின் எந்தக் கோழைத்தனமான FIR-களாலும் நசுக்கிவிட முடியாது. சமூக நீதி வெல்லும் வரை எங்கள் போராட்டம் தொடரும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.