மோடியின் தந்தை வந்தாலும்...– காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் சர்ச்சை பேச்சால் கொந்தளித்த பாஜக..!
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாட்னாவில் முன்னாள் முதல்வர் கிருஷ்ண சிங்கின் 139வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது, எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கி பேசினார்.கூட்டத்தில் இருந்த ஒருவர், 'பிரதமர் மோடியை யாராலும் தோற்கடிக்க முடியாது,' என்று கூறினார்.
உடனே அவரை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கி, அங்கிருந்து வெளியேற்றினர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கார்கே, 'மோடியின் தந்தை வந்தாலும் தோற்கடிக்கப்படுவார்,' என்று கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் தந்தையைப் பற்றி அவதூறு பேசியதாக மல்லிகார்ஜுன கார்கே மீது பாட்னா கோட்வாலி போலீஸ் ஸ்டேஷனில் பாஜ மாநில காரிய கமிட்டி உறுப்பினர் கிருஷ்ணா சிங் கல்லு புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே, பிரதமர் மோடியின் தாய் குறித்து எதிர்க்கட்சி நிர்வாகி அவதூறு பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் அதே மாதிரியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதற்கு பாஜவினர் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.