அமித்ஷா, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்..!!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தடியடிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா 'எக்ஸ்' தளத்தில், "மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும். அத்துடன் அவர்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
மாணவர்களை அவமானப்படுத்திய மற்றும் கொடூரமாகத் தாக்கிய ஒவ்வொருவரும் — அவர்கள் அரசுத் தரப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது மற்றவராக இருந்தாலும் சரி — அடையாளம் காணப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.
அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதல் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜூலை 22 அன்று நாடாளுமன்றத்தில் முழுமையான மற்றும் அர்த்தமுள்ள விவாதம் நடத்தப்பட வேண்டும்.
குறைந்தபட்சம், பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கும் — குறிப்பாக டெல்லி வீதிகளில் தாக்கப்பட்ட மற்றும் அவமானப்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கும் — நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்" என்று கேரா குறிப்பிட்டுள்ளார்.