40 நாள் தொடர் போராட்டத்தை அறிவித்தது காங்கிரஸ்..!
கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ரோஜி ஜான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த காரணத்தால், கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
முந்தைய ஆண்டுகளிலும் இதே போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், அதன் பிறகு என்ன நடந்தது? அந்த வழக்கில் அடுத்தக்கட்டமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இதுபற்றி எந்த விவரமும் கிடையாது.
கடந்த 5 , 6 ஆண்டுகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
வினாத் தாள் வெளியான விவகாரத்தால் மே மாதம் 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இதுவரை 14 மாணவர்கள் உயிரை மாய்த்திருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 3 பேர்.
இது மட்டுமா? இந்தியாவில் நடைபெற்ற 94 வகையான தேர்வுகளில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. வருடத்திற்கு 6 கோடி மாணவர்கள் இந்த முறைகேடான தேர்வுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு மாணவர் குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து நீட் தேர்வுக்கு தயாராகின்றார். இதை கணக்கு வைத்து பார்த்தால், சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வீணாகியுள்ளது.
'டிஜிட்டல் இந்தியா' என மார்த்தட்டி சொல்லும் பாஜக அரசால், ஒரு தேர்வை கூட முறையாக நடத்த முடியவில்லை. நீட் தேர்வினால் மாணவர்களிடையே தீவிர மனநலன் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
இதற்கு யார் பொறுப்பு? மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும்.
மத்திய அரசிடம் நாங்கள் 4 கோரிக்கைகளை முன் வைக்கிறோம். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும். நீட் தேர்வில் நடைபெறும் குளறுபடிகளை களைய வேண்டும்.
தேர்வு முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். அனைத்து தேர்வுகளுக்கும் வருடாந்திர அட்டவணைகள் வெளியிட வேண்டும். மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 40 நாட்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, நாற்பதாவது நாளில் நிறைவாக ஆகஸ்ட் 9-ம் தேதி டெல்லியில் மிகப்பெரிய மாணவர் போராட்டம் நடைபெறும்" என அமைச்சர் ரோஜி ஜான் கூறினார்.